எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

காரணம் இல்லாமல் ஏன் கவலைப்படுகின்றாய்?
யாரைக் கண்டு காரணம் இல்லாமல் பயப்படுகின்றாய்?
யார் உன்னை கொல்ல முடியும்?
ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.

ஆக இந்த தேவையற்ற கவலைகளைத் தாண்டி விடுங்கள். மிரட்டும் கவலைகளை மறந்து விடுங்கள். உங்கள் வேலைக்கான இன்டர்வியூ சரியாகப் போகவில்லையா விட்டுத் தள்ளுங்கள். அன்பான உறவிலே திடீரென விரிசலா? வேதனைப்படாதீர்கள்.

எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நன்மை நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. எல்லாம் ஒரு சுழல் வட்டம் தான். உங்கள் எதிர் காலத்தினை பற்றி யோசிக்க வேண்டாம். கடந்த கால வேதனைகளில் மூழ்க வேண்டாம். இந்த நொடியினைப் பற்றி நினையுங்கள். முறையாய் செயல்படுங்கள்.

அரிய கருத்தினை கீதை நமக்குச் சொல்லிக் கொடுத்துள்ளது. உடனே இதனை நடைமுறைபடுத்துவது எளிதல்ல. ஏனெனில் நம் உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் நாம் கவலையை ஏற்றி வைத்துள்ளோம். அதனையே அசை போட பழகியுள்ளோம்.

ஏமாற்றத்தினையே எதிர்பார்க்கும் வழக்கத்தினை உருவாக்கி வைத்துள்ளோம். நாளை என்ன நடக்குமோ என்ற பயமே வாழ்வாகி விட்டது. இது தான் வாழ்வின் அர்த்தமா? நினைத்துப் பார்த்தால் எத்தனை காலத்தை இது போல் வீணடித்து விட்டோம் என்று புரியும். மாறுவோம் தினம் இதனை விடாது படிக்கும் பொழுது அந்த நொடியில் முழுமையாய் வாழ செயல்படத் தொடங்குவோம். வாழ்விற்கு புது அர்த்தம் கிடைக்கும்.

வேலை செய்ய உனக்கு உரிமை இருக்கின்றது.
பலனை எதிர்பார்க்கும் உரிமை உனக்கு இல்லை.

பலனை, பரிசினை எதிர்பார்த்து ஒரு செயலினைச் செய்யாதே அல்லது எதுவுமே செய்யாமல் வெறுமனே இருந்து விடவும் எண்ணாதே.

நாம் எதற்காக உழைக்கின்றோம். உணவு வேண்டும், பணம் வேண்டும், வீடு வேண்டும், கார் வேண்டும், வருங்காலத்திற்காக சொத்து வைக்க வேண்டும், ஆக நமது ஒவ்வொரு செயலிலும் ஒரு குறிக்கோள் உண்டு. பலனை எதிர்பார்க்கும் வேகமும் உண்டு.

இதையே இன்னமும் அதிகம் வேண்டி காலவரையற்று உழைக்கின்றோம். எவருமே கிடைத்ததில் திருப்தி அடைவதே இல்லை. இதன் வலி அதிகமாகி கொண்டே இருக்கின்றது. இது தேவையற்றது. ஆக கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாராது இருங்கள். மனம் வலியின்றி இருக்கும்.

ஆத்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. பயம் என்ற உணர்வு நம்முள் புகுந்து விட்டால் வாழ்கை கடுமையானதாகி விடும். பயமும், கவலையும் இரண்டு எதிரிகள் மனிதனுக்கு. ஆக இவை இரண்டும் மனிதனுக்குள் இருக்கக்கூடாது.
ஒருவர் வெறும் கையோடு இவ்வுலகிற்கு வருகிறார். வெறும் கையோடு இவ்வுலகை நீங்குகிறார்.

இன்று எது உன்னுடையதோ அது நாளை
வேறொருவருடையது பின் அடுத்த நாள்
அது மற்றொருவருடையது

ஏன் உலக பொருட்களோடு தீரா பற்றினை நாம் வைத்துள்ளோம். ஒரு பேனாவினைக் கூட மற்றவருக்காக நம்மால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. அப்படியிருக்க இத்தனை பொருட்களை நாம் எப்படி எங்கு கொண்டு செல்லப்போகிறோம்.

நரகத்திற்கு மூன்று வாசல்கள்
காமம், கோபம், பேராசை

இந்த மூன்றின் பாவ விழைவுகளை பற்றியும் அனைவரும் அறிவர்.

மனிதன் நம்பிக்கையில் உருவானவன். ஒருவர் எப்படி நம்புகிறாரோ அப்படியே மனிதனின் எண்ணங்களும், நம்பிக்கைகளுமே அவர் வாழ்க்கையினை நிர்ணயிக்கின்றன. சதா எதிலும் சந்தேகம் கொள்பவர் வாழ்வில் பலன் இன்றி ஆகிவிடுகின்றன. முடியும் என்று நம்புங்கள் கண்டிப்பாய் முடியும். எதிலும் சந்தேகப்படுவருக்கு எந்த இடத்திலும் மகிழ்ச்சி கிடைக்காது.

ஒருவனின் மனமே அவனுக்கு நண்பனாகவும் இருக்கலாம். பகைவனாகவும் இருக்கலாம். எனவே உங்களை முதலில் நம்புங்கள் உங்கள் மனம் உங்களின் நண்பனாகமாறும். பகவத்கீதை தியானத்தின் முக்கியத்துவத்தினை அதிகம் குறிப்பிட்டுள்ளது. தியானம் மனதினை ஆடவிடாது. நிலை நிறுத்தும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் பணத்தின் மீதே கவனம் செலுத்தும் மனிதனால் தியானத்தின் மீது எவ்வாறு கவனம் செலுத்த முடியும் தேவையான அளவிற்கு மேல் எதனையும் இல்லாது வைத்துக்கொண்டால் தியானத்தின் மூலம் மன அமைதி பெறலாம். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அதே சூழ்நிலைகளும், அதே போன்ற மக்களும், சமுதாயமும் எப்போதும் இருக்காது. காலத்தில் அவை மாறும். அதனால் ஒன்றினையே நினைக்கக் கூடாது. மாற்றங்கள் பிரபஞ்சத்தின் சட்டங்கள்.

இவ்வுலகில் எதுவுமே நிலையானது அல்ல. பிறப்பவர் இறப்பார் இறப்பவர் பிறப்பார். பல நேரங்களில் கடவுள் நண்பனாகவே வருகின்றான்.

எதற்கு ஆரம்பம் இருக்கின்றதோ அதற்கு முடிவு இருக்கின்றது.
ஒரு நாள் அழியப் போவதுதான் இந்த உடல்.எல்லாவற்றிலும் என்னை பார்க்கின்றவனையும்
என்னில் எல்லா வற்றினையும் பார்க்கின்றனவனையும் நானும் அவனை விடுவதில்லை.
அவனும் என்னை விடுவதில்லை.

மோகத்தை அடைய ஒருவனுக்கு ஒரே ஒரு சத்துரு அவனது மனமேயாகும். தன்னைத்தானே வென்றவன் தனக்குத்தானே நண்பன். தன்னைத் தானே வெல்லாதவன் தனக்குத்தானே பகைவன் ஆகின்றான். தனக்குத் தானே நட்பாகும் பொழுது உலகம் முழுவதும் அவனுக்கு நட்பாகின்றது. தன்னைத்தானே கட்டி ஆள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனக்குத்தானே பகை ஆகின்ற பொழுது உலகம் அவனுக்குப் பகை ஆகின்றது.

உடல் அழிய கூடியது. ஆத்மா அழிவதில்லை. உடலுடன் சம்பந்தப்பட்ட ஆசைகள் வேண்டாம். பலனை எதிர்பாராது வேலை செய்தால் வாழ்க்கை எளிதாக இருக்கும்.

நீங்கள் மிகப் பெரிய உத்தியோகத்தில் இருக்கின்றீர்களா அல்லது சாதாரண வேலையில் இருக்கின்றீர்களா என்பது பெரிய முக்கியமல்ல. எந்த சொத்துக்களும் உங்களோடு வரப் போவதில்லை. அனைவருமே அவரவர் காலத்திற்குப் பிறகு சாம்பலானவர்கள்தான்.

நன்றாக ஆழ்ந்து பார்த்தால் புரியும். இந்த குருஷேத்திர யுத்தம் நம் முன் தான் நடக்கின்றது. நம் அறியாமை என்பது தான் கண்ணில்லா திருதிராஷ்டிரன் போல், தேர் தான் நமது உடல். நம் ஆத்மா இறைவனை சென்று அடைய வேண்டும். நம்முடைய கோபம், பொறுமை, காமம், குரோதம் இவை நம் எதிரிகள். இவைகளைத் தான் நாம் ஜெயிக்க வேண்டும்.

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் இவற்றில் ஒன்றினை கடைப்பிடிக்க வேண்டும். இதில் பக்தி யோகம் கடை பிடிக்க எளிதானது. அன்றாட வாழ்வில் கடமைகளை செய்தபடி, எதிலும் ஒட்டாமல் உயர்நிலையினை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்பது புரிகின்றது. பிரம்ம ஞானம் என்ற உயர் அறிவினைப் பெற வேண்டும்.

தாமரை இலை நீர் போல பற்றே இல்லாது இருக்க வேண்டும் என்றும் புரிந்து கொள்கிறோம். எதையும் தனக்கென்று முனையாது இறைவனுக்கு அர்ப்பணித்து செய்யும் பொழுது சுய நலமின்மையும், தியாகமும் ஏற்படுகின்றது. வாழ்க்கையில் நமது கடமைகள் எல்லாம் சுமூகமாகவே இருக்கும் என சொல்ல முடியாது. போராட்டமாகவும் இருக்கலாம். இவ்விரண்டினையும் சமமாகவே பார்க்கும் மனநிலை ஏற்படும்.

ஆன்மீகம் என்று சொல்லி சும்மா இருந்தால் கூடாது. வேலை செய்ய வேண்டும் என்பதனை பகவத் கீதை சொல்லித் தருகின்றது. வாழ்க்கை என்பது எளிதான பயணம் அல்ல. நமக்கு ஒவ்வொரு நொடியும் நம்மை வழிநடத்தி செல்ல நம் கையோடு ஒரு குரு தேவை. ஆசிரியர் தேவை. நண்பன் தேவை. இவை அனைத்துமே இந்த பகவத் கீதை தான்.

அண்ட சராசரங்களும் அந்த இறைவனின் அசைவினாலேயே இயங்குகின்றன. அந்த இறைவனை ஒரு சின்ன இலை. பூ, பழம், தண்ணீர் இவற்றினை கொண்டு கூட பக்தியாக பூஜிக்கலாம். இன்னமும் பிரபஞ்சத்தின் முழுமையினை விஞ்ஞானிகளால் அறிய முடியவில்லை. கிருஷ்ண பகவானின் விஸ்வ ரூபத்தினையும் முழுமையாய் அறிய முடியவில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பகவத் கீதையை அனைவரும் பூஜித்து வாழ்வின் உயர் நிலையினைப் பெறுவோமாக.