ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள் பாடிய நயினை நாகேஸ்வரி தோத்திரமாலை.
காப்பு
ஐம்புலனோ டாணவத்தை அறமிதித்து
அன்பர்தனக் கின்பந் தந்து
உம்பருல கரசியற்ரும் திருமாற்கும்
வரமருளே ரம்பா வென்று
வம்பலையக் கயமுகனார் சிரமரிந்து
அமரர்குல வாழ்வாய் வந்த
அம்பலவா ணானந்த விநாயகன்தாள்
பரவிவினை யகற்றி வாழ்வாம்.
நூல்
கற்பகக் கன்றைக் கடம்பனைத்
தந்த கனகவரை
அற்புத மோன அருளாழி
ஞான அமிர்த வல்லி
தற்பரை வாமம் தழைத்தே
சரம சராதிதரு
நற்பதி யே எனைப் பெற்ற
சதானந்த நாகம்மையே.
பெற்றதாய் பார்க்கப் பிள்ளையான் வருந்திப்
பிறப்பெனும் சாகரத்தாழ
நற்றவ மில்லா என்னை நீ விட்டால்
நியாயமோ நல்லுரையாகச்
செற்றவக் கரையி லேறியான் உய்யத்
துணைஉனை யன்றியா ருளர்சொல்
கற்றவர்க் கினியாய் நயினையம் பதிவாழ்
கண்மணி நாகபூஷணியே.
அம்பிகை அமலை அரியவர்க் கெட்டா
ஆரணி பூரணி கௌரி
நம்பினோர்க் கின்பம் தருமனோன் மணியே
நற்றவரோ டுறவாக
வெம்பி வாடாதுன் சேயெனைச் சேர்த்து
விடுவதுன் கடன்வினை நீக்கித்
தம்பிரான் மோன சற்குரு போகம்
தந்தருள் நாகபூஷணியே.
தந்தருள் ஞான சாதனம் சத்தியம்
தவறிலா நெறிபொறை அறிவு
பந்தமால் எய்யாப்பக்தி பேரன்பு
பகலிரவுன் அரவிந்த
அந்தமே யில்லா அடியிணை மாறா
தருள்புணர்ந் தோங்கு நற்றியான
சிந்தையாய் மோன தேசிகன் திருத்தாள்
சேர்ந்தருள் நாகபூசணியே.
சேர்த்தருள் அன்னே தீவினை கழியச்
ஜெனனமு மரணமு மொழியக்
காத்தருள் என்னை நின்கையில் தந்தேன்
கருணையே ஒளிவிழி பரப்பிப்
பார்த்தருள் ஈன்ற பகவதி ஆயி
பங்கயத் தாள்முடி முடி
நீந்தருள் பாவ நிலைகெட மோன
நிலையருள் நாகபூசணியே.
பாவமே விளையும் பாழ்வினை ஏதும்
பற்றிடா திருக்க நின்பாலே
தாகமே மறவா தோர்நிலை பக்தி
தண்ணளி வள மருள் ஞான
யோகமே உதவி உலகெலா மீன்ற
உத்தம ருக்குற வாகிப்
பாகமே நீங்காப் பரபரா னந்த
பதமருள் நாகபூசணியே.
கற்றவர்க் கினியாய் நயினையம் பதிவாழ்
காரணி நாரணன் தங்காய்
மற்றவ ரறியா மரகத வரையின்
வாமமே வளர்பசுங் கொடியே
நற்றவ நிலையின் சேயெனை இருத்தி
நாதநா தாந்தமும் காட்டி
முற்றுமாய் நிறைந்த பூரணா னந்த
முத்திதா நாகபூஷணியே.
முத்தியாங் கரையைப் பற்றி நானுய்ய
முன்னதாய் முரணலை மோதி
வற்றிடா மாய வாரிதி யதனில்
மயங்கி வீழ்ந் தாழ்ந்திட வாறு
சத்தியாய்ச் சிவமாய்த் தனிப்பரம் தானே
தானுமாய் நின்ற தற்பரையே
சித்தெலாம் வல்லாய் சேயெனைக் காத்தாள்
திருமணி நாகபூஷணியே.
காததெனையாளும் கனகமா வரையே
கமலையும் காயையும் மருங்கே
நீந்தவர் அமரர் கருடகெந் திருவத்
நின்பணி புரிபவர் அன்னே
வேர்த்தவ ராய் நின் றுயிர்த்திர ளாட்டு
வினையெலாம் பற்றி நீறாகப்
பார்த்தருள் விழியைப் பரப்புதி என்ற
பார்ப்பதி நாகபூசணியே.
பார்ப்பதி யேக பதியரன் பங்கி
பங்கயச் சிருட்டிபல் லுயிர்க்கும்
கார்ப்பதி பதியாய்க் கதிதரு கங்கா
நங்கையே கருணைமா கடலே
சீர்ப்பதி யாகித் தெளிவுற ஈன்ற
சேயெனை உணர்த்தி ஈத்து என்றே
பார்த்துள ராதாண் டருள்புரி ஞான
அம்பிகை நாகபூசணியே.