காப்பு

வந்திப் போர் வினைகளெலாம் நீக்குமையன்
வாரணமா முகம்பொலியும் வள்ளல்துன்பம்
சிந்திப்போம் படியருளும் செய்ய பாதன்
திகழு பிர ணவவடிவ மானசீலன்
தந்திமுகத் தொருகோடு கையிலேந்தித்
தாழ்வரையிற் சரிதைபொறி தமிழோன் பாதம்
சிந்திப்போம் நயினைவளர் இரட்டங்காலித்
திருமுருகன் மீதூஞ்சற் பதிகமோத.

நந்திகண நாத்ர்முழ விசைத்து ஆட
நாரதர் தும்புரு நரம்பு மீட்டியாட
அந்தரம்தூர்த் தமரர்களி நடமேயாட
ஆனந்த வெள்ளத்தி லடியார் ஆட
முந்திவந்து பணிந்தயனும் மாலுமாட
முன்பு நின்று வாணிதிரு முரையேபாட
எந்தைசிவ குருபரவெம் மிரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீருஞ்சல்.

உலகெல்லாம் பரந்தபே ரொளியேயாகி
ஓம் என்று ஓங்கார நாதமாகி
அலகில்லா விளையாட்டு ஆற்றுந் தெய்வ
ஆண்மையோடு அழகும் பேரருளுங் கொண்டு
தலமெல்லாம் நீநின்றாய் தனிவேலோடு
தாயானாய் சேயானாய் தானுமானாய்
இலமென்ற அடியவர்க்கு இரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீருஞ்சல்.

எழில்வதன மிருமூன்றுஞ் சுடர்கள்வீச
இலங்கிலைவேல் பகைகடிந்து எழிலே கொஞ்சக்
கழிபெருகு முவகையொடு அடியார் சூழக்
கடம்பு அசைந் தணிமார்பிற் காட்சியோங்க
அளிமுரளும் மாலையென அசைந்து ஒல்கி
அருளுருவாம் தெய்வானை வள்ளியாட
எழில் பெருக்கி யாடல்புரி யிரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீரூஞ்சல்.

திரட்டவரு மருட்செல்வ மடியார்க்குந்தன்
திருவதன முகங்காட்டித் திருவுங்காட்டி
மருட்டுவிழி மையலாள் தெய்வயானை
மானனையாள் வள்ளியொடு மயில்மீதேறி
விரட்டிடுவாய் ஊழ்வினையின் விகற்பமெல்லாம்
வீடுபெற ஏறுநடை விதிப்பாய் எங்கோ
இருட்டுவழி ஒளிவிளக்கே இரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீரூஞ்சல்.

ஏறுமயிலேறிவிளை யாடும் வேலா
ஈசனுமை பாலகனே இறவா வாழ்வே
கூறுபடச் சூர்பிளந்த குமரா தேவர்
குறைதீர்த்த குணக்குன்றே குகனே கோவே
மாறுபாடு முலகவாழ் வதனின் மாய்ந்து
மடியுமுனம் மலரடிக்கே சேவை செய்ய
ஈறிலாப் பதந்தருவாய் இரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீரூஞ்சல்.

துள்ளிவரு வேற்படையே துணையாய் நிற்கத்
தூயமனத் தொண்டர் குழாம் சுற்றிநிற்ப
அள்ளிவரு மருட்செல்வம் அறமேயாக
ஆறுமுகா நின்நினைவே எண்ணமாக
கொள்ளவரு வினைகளையான் வெல்லவேண்டிக்
குவலயத்தில் தவங்கிடவேன் குமராவுந்தன்
எல்லையிலா அருள்தருவாய் இரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீரூஞ்சல்.

இல்லையென இரப்போர்க்கு இயம்பா நெஞ்சம்
இரவுபகல் நின்னடியார்க் கியற்றுஞ் சேவை
தொல்லையெழு பிறவியிலுந் தோற்றா நோய்கள்
தொழுதழுது சுரக்கின்ற கண்ணீர் வெள்ளம்
அல்லலுறுத் தானந்தமான வாழ்வு
ஆவலோடு பெறநின்றேன் அகத்தின் வைர
எல்லையிலே வந்தருள்வாய் இரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீரூஞ்சல்.

பண்டுலக வழக்கொழிந்து பரவும்கொள்கைப்
பக்திநெறி பழவினையாய்ப் பழிப்பாயெண்ணிக்
கொண்டுவரு கலியுகத்தின் கோலம்மாறக்
குவலயத்திற் குருபரனாய்க் குருவாய் நின்றாய்
வென்றுலகை விஞ்ஞான விளைவுமானாய்
விழுப்பொருளே உணராதார்க் குணர்வுமானாய்
என்றுமுள தபயமைய இரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீரூஞ்சல்.

செந்தமிழ்த் தீஞ்சுவையுணர்ந்து வனமேயேகித்
திகழ்நாவல் மரமேறியவ்வைக் கன்று
வந்துசுட்ட பழமீந்த வடிவேலைய
வருவினைகள் கடிந்திடுவேல் வலத்தின்வாங்கி
நொந்துருகு மடியாரை வாட்டும்வெய்ய
நோவகற்றி யருள்பொலிய ஊசலேறி
இன்றெமக்காய்த் திருவருளோ டிரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீரூஞ்சல்.

அன்றுதிரு முருகாற்றுப் படையையோதி
ஆவலித்த நக்கீரற் காகவேகிச்
சென்று பிலமடைந்தங்கு பூதத்துற்ற
துயர்துடைத்த வைவேலோய்! துய்மையோங்கி
என்றுமொளி நல்குமுன திணையேயில்லா
இருபாத மலரிறைஞ்சு மடியார் வேண்ட
இன்று பொலிந் தருள் நயினை யிரட்டங்காலி
இளமுருக! வள்ளலே! ஆடீரூஞ்சல்.

ஆறுபடை வீடுடைய அழகன் வாழ்க
அருள் பொழியும் வள்ளி குஞ்சரியாள் வாழ்க
கூறுபடச் சூர்பிளந்த படையும் வாழ்க
குலவுமயில் சேவல் நலங் கூடவாழ்க
வீறுபுக ழவனடியார் மேன்மேல் வாழ்க
விரும்பு மன்னபூரணியாள் விறலும் வாழ்க
ஈறில்புகழ் பெற்றுலகம் இனிது வாழ்க
எங்கும் வேள் திருநாமம் வாழ்க வாழ்க.

ஆக்கம்: வித்துவான் சி. குமாரசாமி