நயினாதீவிற் சிறந்த துறைமுகங்களும், யாத்திரைத் தலங்களும் இருந்தமையால் பல வெளிநாட்டு வணிகர்களும், பல வெளிநாட்டு யாத்திரிகர்களும் காலத்துக்குக் காலம் இத்தீவைத் தரிசித்தனர்.

புத்தர் பெருமான் கி.மு 523 இற்கும் கி;.மு 483 இற்குமிடையில் தமது யாத்திரை காரணமாக நாகதீவைத் தரிசித்து நாக வழிபாடியற்றியிருக்க வேண்டும். அவர் வந்தபோது ஏற்பட்ட அரச சபைப் பிணக்கையும் தீர்த்து வைத்துள்ளார். சாவக நாட்டு மன்னன் புத்தரது பாதபீடிகையைத் தரிசிக்க மரக்கலமேறி வந்தனனென மணிமேகலை கூறும், பர்மாவில் இருந்து தர்மசோக மகாராசா புத்திர சோகத்தால் வருந்தி நாக வழிபாடியற்றிப் புத்திரப்பேறடைய நாகதீவு வந்தாரென அறியக்கிடக்கின்றது.

பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் நாகவழிபாடியற்ற மணிபுரத்துக்கு வந்த நாககன்னிகையை மணஞ்செய்து பப்பிரவாகன் என்னும் புத்திரனைப் பெற்றானெனவும், பப்பிரவாகனது பெயரே பப்பிரவாகனன் சல்லியென ஸ்ரீ நாகபூசணி ஆலயம் அமைந்த விடயமென அறியக்கிடக்கின்றது. ஆபுத்திரன் வந்த அட்சய பாத்திரமெனும் அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையிலிட்டுச் சென்றான்.

நெடுமுடிக்கிள்ளி எனும் சோழவரசன் யாத்திரை காரணமாக மணிபல்லவத்துக்கு வந்து  பீலிவளை என்பாளை மணந்து அதன் பேறாகத் தொண்டைமான் இளந்திரையனைப் பெற்றானென யாழ்ப்பாணச் சரித்திர நூல் கூறும்.

நயினாதீவில் கிரேக்க, உரோம, இந்திய, சீனப் பழைய நாணயங்கள் காலத்துக்குக் காலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவிற் கி.பி 12 ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட சாடிகள் நயினாதீவு கிணறு ஒன்றிற் கண்டுபிடிக்கப்பட்டன. மகாபராக்கிரமபாகுவின் சில சாசனப்படி அநேக வெளிநாட்டுப் பிரயாணக் கப்பல்களும், வணிகக் கப்பல்களும் நயினாதீவு துறைமுகங்களுக்கு வந்துள்ளன.

போர்த்துக்கேயர் காலம்

போர்த்துக்கேயர் வருகை நயினாதீவுக்குப் பெரும் நட்டத்தையே விளைவித்திருக்கின்றது. நாகபூசணியம்மன் கோயில் முற்றாக அழிக்கப்பட்டது. பொருள்கள் சூறையாடப்பட்டன. இக்காலம் கி.பி 1620 இற்கும் கி.பி 1624 இற்கும் பறங்கியரால் காணித் தோம்பேடுகள் எழுதப்பட்டதாகக் கருத இடமுண்டு. ஆனால், கி.பி 1645 இல் தொம் பிலிப்ஸ்கறிஞ்ஞா அவர்களால் திருத்தமான தோம்பேடுகள் எழுதப்பட்டன. அக்காலத்தில் நயினாதீவில் நிரந்தரக் குடிபதிகளாகவிருந்தவர்களுக்குத் தான் நயினாதீவுத் தோம்பேடுகளில் காணிகள் காணப்படுகின்றன. போர்த்துக்கேயரது சமயம் இங்கே பரவவில்லை. ஆனால், இவர்கள் தங்கள் பெயர்களிற் சிலவற்றைப் பட்டமாகச் சிலருக்குக் கொடுத்துள்ளனர்.  நயினாதீவு 32 கோயிற் பற்றில் ஒன்றாக்கப்பட்டது.

ஒல்லாந்தர் காலம்

ஒல்லாந்தர் காலத்தில் நயினாதீவுக் கடலில் சங்கு குளித்தற் தொழில் மிக விசேடம் பெற்றுள்ளது. அவர்கள் காலத்தில் நயினாதீவு கோவிற் பற்று நொத்தாராகவும், கிராம வரி அறவிடுபவராகவும் இராமச்சந்திரர் கதிரித்தம்பி நியமிக்கப்பட்டார். போர்த்துக்கேயர் அழித்த கோயில் திரும்பச் சிறிதாகக் கட்டப்பட்டிருந்தது. அதையே ஒல்லாந்தர் அழிக்க முற்பட்டனர். கட்டிய காலம் கி.பி 1788. கட்டுவித்தவர் இராமலிங்கர் இராமச்சந்திரர். இவர் காலத்தில் கி.பி 1792 இல் ஒல்லாந்தர் நாகபூசணியம்மன் தேவாலயத்தை அழித்துச் சூறையாட வந்தனரெனவும், அவர் தான் ஒல்லாந்த இறப்பிறமாது சமயத்துக்கு உதவி செய்வதாகவும் கூறி கிராம வரியையும் அறவிட்டுக் கொடுத்தார். ஒல்லாந்தர் தமது பட்டத்தை இவருக்கு வழங்கிப் பிறான்சீக் கதிரித்தம்பி என அழைத்தனர். இவரது கையொப்பங்கள் எல்லாம் யாழ்ப்பாணக் காணிக் கந்தோரில் பிறான்சீக் கதிரித்தம்பி எனவே அமைந்துள்ளன. இறப்பிறமாது சமயமே புரட்டஸ்தாந்து மதமாகும். ஒல்லாந்தர் காலத்திற் தான் நயினாதீவில் புரட்டஸ்தாந்து மதத்துக்குரிய ஒரு இடம் நயினாதீவு 5 ஆம் வட்டாரத்தில் இருக்கிறது. ஆயினும், தற்போது அச்சமயத்தைப் பின்பற்றுவபரெவருமில்லை. இவர்கள் காலத்திற் தான் தூத்துக்குடி முஸ்லிம்கள் நயினாதீவில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். தென்னந் தோட்டங்களை அமைத்தனர். பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தனர் எனத் துணிந்து கூறலாம்.

ஆங்கிலேயர் காலம்

2-3-1815 இல் தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்தது. நயினாதீவு வடமாகாணத்தில் யாழ்ப்பாணப் பெரும்பிரிவில் தீவுப் பகுதி மணியகாரரின் நிர்வாகத்தின் கீழ் ஒரு பகுதியாக அமைந்தது. பரிபாலனத்துக்காக உடையாரும் விதானையாரும் நியமிக்கப்பட்டனர். பிற்காலத்தில் மணியகாரன் முறை மாற்றமடைந்து தீவுப்பகுதிக் காரியாதிகாரியின் கீழ் நிர்வாகம் மாறியது. விதானையென்ற ஒரு தலைமையின் கீழ் பொதுமக்களது விவகாரங்களும் அமைந்தன. கிராமச் சங்க முறை உருவாகியது. மக்களாற் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கிராமச் சீர்திருத்தங்களில் ஈடுபட்டனர்.

சுதந்திர காலம்

4-2-1948 இல் இலங்கை சுதந்திரமடைந்தவுடன் நயினாதீவு தீவிரமாக முன்னேற்றமடைந்தது. ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவாலயமும், ஸ்ரீநாக விகாரையும் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டன. தற்போதைய காலத்தில் நிகழ்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் ஸ்ரீ நாகபூசணியம்மனின்  திருத்தேர் அமைப்பும், நயினாதீவு யாத்திரிகர் அன்னதான சபையாரின் அமுதசுரபி மணிமண்டபமுமாம்.

இன்று வரை நயினாதீவு தனது கடந்த காலச் சரித்திரத்தை நினைவூட்டித் தனது எதிர்காலச் சரித்திரத்தை மிகச் செழிப்புடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறது.