நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான்நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார்.அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார்.
தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும்.
நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் எனக் கூறியப் பின் மறைந்து போனார். வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார்.
ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது.
ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது.
வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார்.
அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார்.
ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர்.
அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார்.
கிருமிகள் ரத்தத்தில் இருப்பதால் அட்டை மூலம் ரத்தத்தை உறிஞ்ச வைப்பது அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில் தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டை காணப்படுகிறது.ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி அன்று தன்வந்திரி பகவான் அவதாரம் செய்ததாக மகாபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நாளில் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம.பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களை தீர்ப்பவனாகா இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மகா விஷ்ணு பகவானே உன்னை வணங்குகிறோம்.