கோவில் என்றால் தரிசிக்கவும், கடவுளிடம் நம் குறைகளை கூறவும் அதானால் ஏற்படும் மன நிறைவும் தான் முக்கியம். இதில் வழிபட ஒரு கட்டமைப்பும், ஒழுங்கு முறையும் நம் முன்னேர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. அதன்படிதான் ஆகம விதிப்படி கோவில்கள் பழங்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கோவில்களை தரிசனம் செய்யும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.

கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும்.

ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயாரை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றினால் நன்மை பயக்கும். தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

எல்லாக் கோவில்களிலும் முதலில் வினாயகரைத்தான் வணங்க வேண்டும். எந்த ஒரு காரியத்திற்கும் மூலமும், நாயகனும் அவரே. அவரின் அனுக்கிரகமும்,அருளும் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே அவரின் ஆசியும் அருளும் பெற்று பின் திருக்கோவிலில் நுழையவேண்டும். நமது விக்கினங்களை போக்கும் அந்த விக்கினேஸ்வரனை வழிபட்டுப் பின் அவர் அருகில் இருக்கும் முருகரை வழிபட வேண்டும்.

வள்ளி தெய்வானை சமோதர முருகரை வழிபட்டு பின் அடைவது துர்கா தேவி சன்னதி, தேவி துர்க்கை வெற்றிகளையும் நல்ல வாழ்க்கையும் அருளுவார். அவரை மனமார வேண்டிக் கொண்டு பின் அடைவது அம்மா லோகஸ்வரி, ஜகதாம்பா.ஜகன்மாதா பார்வதியின் சன்னதி(இடத்தின் காரணமாக பெயர் மாற்றப்ட்டிருந்தாலும்), அம்பாளை,சிவசக்தியை வணங்கி பின் மூலவரின் சன்னதி சேர வேண்டும்.

அங்கு கோவிலில் இடமிருந்து வலமாக பூமியின் சுழற்சி நியதியின் படி சுற்ற வேண்டும். முதலில் வருவது குரு பகவான் சன்னதி அல்லது சுவர் பக்கமாக இருக்கும் சிலையாக இருப்பார். அங்கு கல் ஆலமரத்தின் அடியில் சனகாதி முனிவர்களிக்கு தரிசனம் அளித்து மூலப் பொருளை உபதேசித்த கோலத்தில் கையில் சின் முத்திரை காட்டி தஷ்சனாமூர்த்தியாக குருபகவான் அமர்ந்து இருப்பார். நல்ல கல்வி,மனையாள், மணவாளன், நல்ல குடும்பம் அளித்த அவருக்கு மஞ்சள் ஆடை, கொண்டக்கடலை மாலை அளித்தும் வணங்கலாம், அல்லது மானசீகமாக வணங்கி பின் பின்னால் வந்தால் லிங்கோத்பவர் சன்னதியை காணலாம். அடி முடி காண பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் ஈசன் விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்ற கோலம் இது. சற்று கூர்ந்து கவனித்தால் லிங்கோத்பரின் மேல் பகுதியில் இடப் பக்கத்தில் அன்னப் பறவையாய் பிரம்மாவையும், வலப்பகுதி கீழ் பகுதியில் வராகமாய் விஷ்னுவையும் காணலாம். இவ்வாறு மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்து பின் நாம் சண்டிகேஸ்வரை வந்தடைவேம்.

நம் மக்கள் சண்டிகேஸ்வரரின் முன்னால் கைதட்டியும் அல்லது விரலில் சொடக்கு போட்டும் கும்பிடுவார்கள். அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் அவருக்கு காது கேக்காது என்ற வதந்தி. உண்மை அது இல்லை. சாதரணமாக நம்மை ஒருவர் கை தட்டியோ அல்லது சொடக்கு போட்டுக் கூப்பிட்டால் நாம் மரியாதைக் குறைவாக செயலாக கருதுவேம் அல்லவா, ஆனால் இங்கு கடவுளை அவ்வாறு செய்வது உசிதம் இல்லை அல்லவா. இது மாதிரி செய்வது தவறு.

பின் என்ன செய்யவேண்டும் என்றால், சண்டிகேஸ்வரர் சிவனின் கருவூல அதிகாரி,கணக்காளர். சிவன் செத்து குல நாசம் என்பார்கள், ஆதலால் அவரிடம் சென்று நம் இரு கைகளையும் விரித்து கண்பித்து நான் இங்கிருந்து சிவபெருமான் அருள் அன்றி வேறு எதையும் எடுத்து செல்லவில்லை என்று மனதில் கூறி வணங்கி ஆலயத்தின் முன் பக்கம் வந்தால் ஆலயம் நுழையும் முன் சனிஸ்வரன் என்னும் சனிபகவான் வலப்பக்கத்தில் அமர்ந்து இருப்பார். அவரை பணிவுடன் பக்கவாட்டில் இருந்து வணங்க வேண்டும். சனிபகவானை மட்டும் நேருக்கு நேர் நின்று வணங்க கூடாது. சனியின் அருளைப் பெறாமல்,அல்லது அவரை வணங்காமல் ஈசனை வணங்கினால் பலன் இல்லை.

அவரையும் வணங்கி விட்டு பார்த்தால் நந்திகேஸ்வரன் இருப்பார் நந்தியை நாம் வணங்கி மூலவரை தரிக்கும் உத்தரவை வாங்கி விட்டு பின் துவாரக பாலர்களை வணங்கி உள் சென்று நாம் மூலவரை தரிசனம் செய்யவேண்டும். பரமனை, முதற்பெருளை, அருளாளனை வணங்கி பின் அமைதியாய் ஆத்மார்த்தமாய் வணங்கி வெளியில் வந்தால் உற்சவ மூர்த்தி சிலையும், அறுபத்தி மூன்று நாயன்மார்களின் சிலைகளும் இருக்கும் அவர்கள் அனைவரையும் வணங்கி பின் நவகிரங்களை சுற்றி வரவேண்டும். சுற்றுக்களை 1.2.3 என்று எண்ணாமல் ஒவ்வெறு கிரகத்திற்கும் ஒரு சுற்று வீதம் அவரின் திரு நாமத்தை கூறி சுற்றவேண்டும்.

நவக்கிரகங்களை சுற்றிப் பின் தலவிருஷ்சத்தை வணங்கிப், ஆலமரத்தின் அடியில் இருக்கும் நாகர்கள், கன்னிமார்கள்களை வணங்கிப் பின் வெளியில் வரும்முன் சூரியன் மற்றும் பைரவர் சிலைகளை வணங்கி வெளியே வரவும். ஆகம விதிமுறைகளின் படி கட்டப் பட்டுள்ள கோவில்கள் அனைத்தும் இந்த முறையில் தான் இருக்கும்.