கோயிலில் கொடிமரம் இருப்பது “ஆலயம் புருஷாகாரம்’ என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. மனித உடலைப் போன்றது கோயில். கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்பதாகும். அதனைத் தொடர்ந்து, வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம்.

ஆலயங்களில் ‘துவஜஸ்தம்பம்’ கொடிமரங்கள் மிகவும் புனிதமானவை. ஒரு ஆலயத்தை முழுமையடையச் செய்வது ஆலயத்தின் கொடி மரம் தான். கடவுளைக் காண முடியாவிட்டாலும் அங்குள்ள கொடி மரத்தை கைகூப்பி கும்பிடுவது அவசியம். ஏனென்றால் கொடி மரத்தின் வழியே கடவுள் ஆலயத்துக்குள் நுழைவதாக ஐதீகம்.

நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும். இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.

சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்துவதற்காகவே கோவில்களில் கொடியேற்றப்படுகிறது. தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.