வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிப்பு என்று கேட்பதைப் போலத்தான் சக்தி வழிபாட்டில் எந்த வழிபாடு உயர்ந்தது என்பது! அதாவது சக்தியை எந்த உருவில் எப்படி வழிபட்டாலும் அது உள்ளம் நெகிழச் செய்யும் அற்புத ஆராதனைதான். அந்த வகையில் பாலா திரிபுரசுந்தரியைப் பற்றியும் அவள் வழிபாட்டு முறைகள் பற்றியும் அறிவோம்.

நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள பிள்ளைத் தமிழ் பருவங்களில் வாலை பருவம் என்பது உண்டு.

ஒன்பது வயது நிரம்பிய பெண் குழந்தையை வாலை என்று கூறுவர். இந்த வாலையம்மன் வழிபாடும் சிறு பெண் குழந்தை வழிபாடே ஆகும்.

பெண்மை என்றாலே சக்தி, வீரம், ஞானம், தாய்மை, கருணை என அனைத்து குணங்களும் நிரம்பியிருக்கும். பெண் குழந்தை என்றாலே அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை வழங்கும். இதனை தான் பாலாவும் செய்கிறாள்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது தன் படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத் தளபதியாக மாதங்கி மற்றும் வாராகியை வைத்து யோகினி சேனைகளுடன் சென்று போர்ப்புரிந்தாள். முதலில் போருக்கு வந்த பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க லலிதா தன்னுள் இருந்து ஒரு சிறு பெண்ணை தோன்றச் செய்து அனுப்பி வைத்தாள். அக்குழந்தையும் அனைவரையும் மாய்து வெற்றியுடன் திரும்பியது. அச்சிறு குழந்தை தான் பாலாம்பிகை.

இவளே வாலாம்பிகை, வாலையம்மன், அசோக சுந்தரி, பாலா திரிபுரசுந்தரி, பாலா என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள்.

திருமூலர் தன் திருமந்திரத்தில்,

சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
சுத்திய நாய் போல கதறுகின்றனவே (1199)

– பராசக்தி சாதகர்களுக்கு சாதகமான பாலாவாவாள். அவளே முக்திக்கும் தலைவி. இதை மக்கள் அறியாமலிருக்கிறார்களே என்று பாடியுள்ளார்.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சிறப்புகள்

வாலையம்மன் (பாலா) சின்னஞ்சிறு குழந்தையாவாள். இவள் குணங்களும் குழந்தைத் தனமாகவே இருக்கும். குழந்தையை கொஞ்சி அழைத்தவுடன் ஓடி வருவது போல ஓடி வருபவள். இவளின் வடிவாமானது சொல்லுதற்கரிய பேரழகு பொருந்திய ஒன்பது வயது குழந்தையாகும்.

கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன் பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பவள். ஞானமே வடிவாக இருப்பவள் ஆவாள். ஸ்ரீ சக்ர வடிவமானவள், ஸ்ரீபுரத்தில் அன்னை லலிதாவுடன் எப்போதும் இருப்பவள். இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம், வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.

நாம் வருகின்ற இக்கலியுகத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வருகிறோம். நற்கதிக்கான வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோம்.

இந்த நரக வாழ்வில் இருந்து விடுபட்டு நற்பேறு அடைய வழிக்காட்டுபவள் பாலாம்பிகையே ஆவாள். அவள் பாதம் பணிந்து சரணாகதி அடைந்து எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.