தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான்.

இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து , தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலைச் சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க , காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.

முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும் , இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான்.

ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான்.இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான்.

அப்போது இடும்பன் வேறற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார்.

அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும்.

இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

காவடிகளின் வகைகள்:

முருகப்பெருமானுக்கே உரிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்ற ஆடிக் கிருத்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திராப் பௌர்ணமி, வைகாசி விசாகம் மற்றும் மாதாந்திரக் கார்த்திகைத் தினங்களில் காவடிகள் பக்தர்களால் எடுக்கப்படுகின்றன. பலவகையானக் காவடிகள் எடுக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் கற்பனை வளத்தோடும், கைவண்ணைத்தோடும், கலை நேர்த்தியோடும் உருவாக்கப்பட்டப் புதிய வகைக் காவடிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

ஆரம்பக் காலத்தில் பக்தர்கள் காணிக்கைகளைச் சுமந்து சென்றக் காவடிகளின் அமைப்பும் அழகும் தொடக்கத்தில் மக்கள் சுமைகளைத் தூக்கிச் செல்லப் பயன்படுத்தியக் காவடிகளின் அளவையும், அமைப்பையும் கொண்டு எளிய முறையில் இருந்தன. அவை உறுதியான கல்மூங்கிலால் ஆன தண்டையும், அதன் இரு முனைகளில் பனைநார் கொண்டுத் தயாரிக்கப்பட்ட உறிகளையுமே கொண்டிருந்தன. பக்தர்கள் மலைமுகடுகளில் வாழும் தெய்வத்திற்கானப் பூஜைப் பொருட்களைக் காவடியாகக் கட்டிக்கொண்டுச் செல்லும்போது அக்காவடிகள் தெய்வீகத்தன்மை கொண்டவையாகப் பரிணமித்தன. தெய்வத்திற்குரியது என்பதால் அவை பின்னர் தெய்வீகக்களைச் சொட்டுமாறு அழகுபடுத்தப்பட்டன.

மயில் தோகைகள், மாவிலைகள், தர்ப்பைப்புல் முதலியவற்றைக் கட்டி, விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவை இடப்பட்டு, மலர்மாலைகள் சாத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. காலம் செல்லச்செல்லக் காவடியின் அமைப்பும் அழகும் வளர்ந்து புதிய, புதியப் பரிமாணங்களை அடைந்தன. இன்று பால் காவடிகள், பன்னீர் காவடிகள், புஷ்பக் காவடிகள், சந்தனக் காவடிகள், பண்டியல் காவடிகள், இளநீர்க் காவடிகள், தீர்த்தக் காவடிகள், அபிஷேகக் காவடிகள், மச்சக் காவடிகள், மயில் காவடிகள், சர்ப்பக் காவடிகள், பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள் என்று பலவகைகள் இருக்கின்றன.

பழநி சந்நிதி முறை என்னும் நூல் பக்தர்கள் ஏந்திவரும் காவடிகளையும், அதில் உள்ளப் பொருள்களையும் மிக விரிவாகப் பட்டியலிட்டுப் பேசுகின்றது.

காவடிச் சிந்து:

பண்டைய நாட்களில் திருத்தலங்களுக்கு யாத்திரைக்குச் செல்லும் எளிய மக்கள் பாதயாத்திரையாக நடந்துதான் செல்வார்கள். இன்றைக்கும் அந்த வழக்கம் இருக்கின்றது. அப்படி நடைப்பயணம் செல்லும்போது, வழியில் பயணக் களைப்புத் தெரியாமலிருக்க எளியச் சொற்களாலானப் பாடல்களைப் பாடியபடிச் செல்வர். அது ‘வழிநடைச் சிந்து’ என்று அழைக்கப்பட்டது.

காவடியைத் தூக்கிக்கொண்டு யாத்திரைச் செல்லும் சமயத்தில் காவடியை வைத்துக்கொண்டு அவர்கள் ஆடும்போதுப் பாடுவதுக் காவடிச் சிந்து எனப்பட்டது. காவடிச் சிந்து துள்ளல் ஓசைக்கொண்ட பாடல் ஆகும். ஒவ்வொரு பாடலடிக்கும் மூன்று சீர்களைக் கொண்டு, எளிய மொழிநடையில், புராணக்கதைகள், பக்தியின் சிறப்புகள், இறைவனின் பெருமைகள், துதிகள், வேண்டுதல்கள் ஆகியவற்றைப் பாடும் பாடல்களாகக் காவடிச் சிந்துப் பாடல்கள் இருந்தன. பாடியபடி ஆடுவதற்கு ஏற்றதொரு சந்தநடையை, தாளகதியை அவைகள் கொண்டிருந்தன. அவ்வகைப் பாடல்கள் மக்களிடையே பிரபலம் ஆனபோது அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியங்களிலும், கச்சேரி மேடைகளிலும் இடம்பெறத் துவங்கின.

தமிழ் இலக்கியத்துக்கு எளியோரின் வழிநடைச் சிந்தைக் கொண்டு வந்தவர் ‘கலியன்’ என்னும் திருமங்கை ஆழ்வார் ஆவார்! பின்னர், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தச் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார் பல காவடிச் சிந்துப் பாடல்களை எழுதி, கடவுளுக்கு உரித்தானக் காவடிச் சிந்தை மேடைக் கச்சேரிக்கும் கொண்டுவந்தார்.

காவடிச் சிந்துப் பாடலைக் கேட்க –