இருளை நீக்கி ஒளியை தரக்கூடிய தீபத்தை ஏற்றி வழிபடுபதே நம் மரபு. அப்படி, தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபடும் விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் ஐந்து முகம் என பல விதங்களில் கிடைக்கிறது. இவற்றிற்கெல்லாம் நடுநாயகமாக வீடுகளில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. நம் மரபோடு ஒன்றிணைந்த இந்த விளக்கு இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இவ்வளவு மகிமைவாய்ந்த மங்கள காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கிறார்கள்?

இவ்வுலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவள் காமாட்சி அம்மன். அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சிக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி தாயை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன்கள் கிடைத்துவிடும்.

காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், குலம் காக்கும் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய முழு அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது என்பது தெரியாது. அப்படியானவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, ‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று!’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடலாம். அவ்வாறு செய்யும் போது நன்மைகள் மேலோங்கும். மேலும் அப்படி ஏற்றப்படும் தீபத்திற்குப் பெயர் “காமாட்சி தீபம்” என்பதாகும்.

அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத்தான், திருமண சடங்குகளில், மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள். திருமணமாகி, புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, “நிறைநாழி” எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் தீபத்தை ஏற்றி வணங்கிய பிறகே வீட்டுக்குள் வருவார்கள். கல்யாண சீர்வரிசைகளை தரும் போது, காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குவார்கள். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.

காமாட்சி விளக்கு மிகவும் புனிதமானது. மங்களப் பொருட்களில் காமாட்சி விளக்குக்கு முதலிடம். இதில், அஷ்டலட்சுமிகளில் ஒருவரான கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும்.