கணபதி ஹோமத்தின் சிறப்பு | Nainathivu | நயினாதீவு

கணபதி ஹோமத்தின் சிறப்பு

ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில் நடத்துவது நன்மை தரும்.

மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர் உருவமற்றவர். மஞ்சளைப் பிடித்து வைத்து கூட விநாயகராக வணங்கலாம். பழங்காலத்தில் பசும்
சாணத்தை விநாயகராகப் பிடித்து வழிபட்டுள்ளனர். பசுவின் சாணத்தை தேவப்பிரசாதம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன. நிலத்தில் படாமல் புல், செடி, கொடிகளின் மேல் விழும் காராம்பசுவின் சாணத்தை பஸ்பமாக்கி அதனை நெற்றியில் விபூதி போல் பூசினால் அது நோய்களை தீர்க்கும் மருந்தாக விளங்கும் எனக் கூறப்படுகிறது.

எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச் சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும் போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி நன்மையை பெறலாம். நாம் ஏதேனும் கடிதம் எழுத துவங்கும் போது பிள்ளையார் சுழியுடன் துவங்குவது மரபு.

விநாயகரே முழு முதற்கடவுள். ஒரு நாள் சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான் தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும்.

கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இகபர லோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஹோமங்களைச் செய்யச் செய்ய சித்தத்தில் தெளிவையும், நம்மையும் அறியாமல் இறைவனை அடையும் ஒரு தாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கையில் உள்ளபோதே பிரம்ம வஸ்துவை அடையும் விவேகத்தையும் அதிகரிக்கும். மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம்.