நயினாதீவு என்ற இந்த சிறிய தீவு ஏன் இலங்கையில் எந்த ஒரு இடத்துக்கும் இல்லாத அளவுக்கு அனைத்து புராண, இதிகாச, இலக்கியங்களோடும், வரலாற்று சான்றுகளோடும் தொடர்புபட்டு இருக்கிறது .அதற்கான காரணம் என்ன? என்ற இந்த கேள்வி உலக அளவில் அனைத்து தமிழர்களிடமும் இருக்கிறது .

1. ஆதி சக்தியின் சக்தி பீடமான புவனேஸ்வரி பீடம் இங்கு அமைந்து இருப்பது அனைவரும் அறிந்த வரலாற்று சான்றாக இருக்கிறது .அந்த ஆலயம் இன்றும் மிகவும் பொலிவோடு இருக்கிறது .

2. ஈழத்தின் பூர்வீக துறைமுகம் ,
அந்த துறைமுகம் நயினாதீவில் இருந்து அழிந்து அதன் அடையாளங்கள் இன்று இல்லாமல் இருந்தாலும் அதற்கான வரலாற்று சான்றுகளை ஆராய்ந்து உறுதிபடுத்த வேண்டியது எங்கள் கடமை ஆகின்றது .

இந்த துறைமுகத்தை சம்புகோவளம், ஜம்புகோளம், சம்புக்கல், சம்புத்துறை என்று பல்வேறு பெயர் கொண்டு வரலாற்றில் அழைக்கபட்டு இருக்கின்றது .கந்த புராணத்தில் சம்பு என்கின்ற இடம் இன்றைய நயினாதீவு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது .அந்த புராண காலத்தில் சம்பு ஒரு தீவாக இல்லாமல் யாழ்ப்பாணத்தோடு இணைத்து இருந்ததால் தீவு என்ற சொல் அங்கு பாவிக்கப்படவில்லை .இந்த சம்பு என்ற இடத்தில் தான் ஈழத்தின் பூர்வீக துறைமுகம் இருந்து இருக்கிறது .இந்த சம்பு என்ற பெயரை வைத்தே யாழ் தீபகற்பத்தை சம்புகோள பட்டிணம் என்று அழைத்தார்கள் .ஆனால் சம்புகோளபட்டிணம் என்பது யாழ் குடாநாட்டை குறித்தாலும் ,சம்பு என்பது இன்றைய நயினாதீவை மட்டுமே குறிக்கும் என்பது உறுதியானது .அதற்கு ஆதாரமாக ஏனைய இன்றைய 6 தீவுக்கும் யாழின் ஏனைய பகுதிகளுக்கும் கந்தபுராணத்தில் வேறு பெயர்கள் குறிப்பிடபட்டு உள்ளது .இதில் இருந்து துறைமுகம் இன்றைய நயினாதீவின் பகுதியில் இருந்து இருக்கிறது என்பது உறுதியாகின்றது .

இந்த துறைமுகம் நயினாதீவில் எந்த இடத்தில் இருந்தது என்பதை பற்றி ஆராய்ந்து பார்ப்போமானால் அது இருந்ததாக உறுதியாக நம்பப்படும் இடம் இன்றைய பிடாரி அம்பாள் ஆலயத்துக்கும் கங்காதரணி தீர்த்த கரைக்கும் இடைப்பட்ட பகுதியாக கருதப்படுகின்றது .அதாவது இன்றைய கத்திய குடா அதற்கான முதன்மையான ஆதார சான்று .அதற்கு மிக அண்மித்த மக்கள் வசிக்கும் காணிகளுக்கு சிறிது காலத்துக்கு முன் வரை உறுதி இல்லை ,அரச சொத்தாக கருதப்பட்டு இருந்தது ,ஏனைய அந்த பகுதி வீட்டு காணி உறுதிகளில் கப்பல் கிடந்தான் என்ற பெயர் குறிப்பிடபட்டு உள்ளது .

வரலாற்று தொடர்புகளை வைத்து பார்ப்போமானால் பூர்வீக காலத்தில் இன்று நாம் தில்லைவெளி என்று அழைக்கும் பிடாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதி ஒரு பெரிய நந்தவனமாக இருந்து இருக்கிறது . இங்கிருந்து தில்லை சிதம்பரத்துக்கு விசேஷமாக அலரி மலர் எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது .புராதன காலத்தில் தில்லை சிதம்பரதோடு நேரடி தொடர்புகளை கொண்டு இருந்ததால் பிற்காலத்தில் கடல் அழிவுகளால் வெளி பிரதேசம் ஆன பின்னும் என்றும் அழியாத அந்த தில்லை என்ற பெயர் கொண்டு இன்றும் தில்லைவெளி அழைக்கபடுகின்றது .இங்கு சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதிகமான அலரி மரங்கள் நின்றதாக இன்று எம்மோடு இன்றும் வாழும் எம் முதாதையர் சான்று கூறுகின்றனர் .

கந்த புராணத்தில் சூரனுடன் சமாதானம் பேச வந்த வீரவாகுதேவர் நயினாதீவு இறங்குதுறைக்கு தனது பரிவாரங்களுடன் வந்து தாய் தெய்வத்திடம் ஆசிபெற்று மகேந்திரமலைக்கு பயணம் செய்ததாக புராண வரலாறுகள் சொல்கின்றது .

மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டும் போருக்கு தங்கள் பக்கம் துணைவர் சேர்க்கவும் ,அஸ்வமேத யாக குதிரையை தேடியும் இங்கு பல முறை வந்ததாகவும் இதிகாச கதைகள் இருக்கிறது .

புராண இதிகாச கதைகள் புனைவுகள் என்று பலர் கருத்து கூறினாலும் சம்பவ இடங்களுக்கு ஒரு வரலாற்று நிகழ்வுகளோடான உண்மை கதை இருப்பது உறுதியானது என்பதை உறுதிப்படுத்த மேலும் பின்வந்த இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் நயினாதீவோடான வரலாற்று தொடர்பை தெளிவாக எடுத்து சொல்கின்றது .

பெரும் வணிகனான மாநாயக்க செட்டி இந்த இடத்துக்கு வணிக நோக்கங்களுக்காக இங்கு பலதடவை வந்து இருக்கின்றார் .கோவலன் இரண்டாவது மனைவி மாதவி புராதன காலத்தில் இங்கு நடக்கும் இந்திர விழாவுக்கு நடன மாதாவாக தன்னுடைய குழுவினரோடு வந்த வேளை சிறுமியாய் அவர்களோடு வந்த அவள் மகள் மணிமேகலை இந்த துறைமுகத்தில் இறங்கியதும் சன நெருக்கத்தில் தாயை தவற விட்டு அழுது கத்திய இந்த பகுதியில் உள்ள இடைத்தையே நாம் இன்று கத்தியாக் குடா என்று அழைக்கின்றோம் .

இந்த துறைமுகம் இயற்கையான தொடுதளமாக ஆரம்பத்தில் இருந்து இருக்கலாம் என்றும்,பின்னர் மன்னார் மாதோட்ட துறைமுகத்தையும் சேது அணையையும் கட்டியதாக வரலாற்றில் அறியப்படும் விஸ்வகர்மாவின் பிள்ளைகளான மயனும் நளனும் இந்த துறைமுகத்தை புனரமைத்து சிறப்பாக கட்டி இருக்கலாம் என்ற கருதுகோளும் இருக்கிறது .

காலத்துக்கு காலம் வந்த கடல் அழிவுகளால் இதன் பகுதிகள் அழிவடைந்த போதும் காலத்துக்கு காலம் ஈழ நாட்டை ஆண்ட மன்னர்களால் புனரமைக்கபட்டு பல நூற்றாண்டுகளாக பாவனையில் இருந்த இந்த துறைமுகம் 10 நூற்றாண்டு வரை பாவனையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது .

வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் கருத்துக்களின்படி அண்ணளவாக கி மு 200 /300 களில் அதாவது தொண்டமான் இளம்திரையன் காலத்தில் ஏற்பட்ட கடல் கோளில் இந்த துறைமுகம் மிகப்பெரிய கடல் அழிவுக்கு உள்ளாகியது என்றும் இதன் பொழுதே தீவுகள் தனித்தனியாக பிரிந்தது என்றும் ,பின்னர் கி. பி 10 காலம் வரை வணிக தேவைகளுக்காகவும் ,கப்பல்கள் கட்டும் துறைமுகமாகவும் முத்துக்குளிக்க வருபவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைக்கும் துறைமுகமாகவும் பயன்படுத்தபட்டதாக கூறுகின்றார்கள்.

ஆரம்ப காலத்தில் மிக சிறந்த பயணிகள் மற்றும் வணிக துறைமுகமாய் விளங்கி இருக்கிறது. கத்திய குடா வில் இருந்த துறைமுகம் ,தில்லை சிதம்பரம் மற்றும் காவிரி பூம்பட்டினத்துடனான தொடர்பு , மௌரியர்குடனான தொடர்பு ,அரபு நாட்டில் இருந்து எல்லாளன் குதிரை வருவித்தது , மாநாயக்க செட்டி நாகரத்தினங்களையும் முத்துமணிகளையும் பெறுவதற்கு வந்தது போன்ற சம்பவங்களையும் ஏனைய வரலாறுகளையும் வைத்து பார்க்கும் போது அது உறுதியாகின்றது. பிற்காலத்தில் கப்பல்கள் பழுது பார்க்கும் ,தண்ணீர், எண்ணைகள், தேவையான பொருள்களை மாற்றும் இடமாக இருந்ததாகவும் பல்வேறு வரலாறுகள் உண்டு .மேலும் கப்பல் கிடந்தான் என்று இந்த பிரதேச இடத்தை அழைப்பதில் இருந்து இந்த இடத்தில் பல கப்பல்கள் தரித்து இருக்க கூடிய வசதி இருந்தது என்பதை விளங்கி கொள்ள முடிகின்றது .

இந்து சமுத்திரத்தின் நீரோட்டத்தில் இந்த கத்திய குடா பகுதியின் அமைவிடத்தை அறிந்தவர்கள் மனக்கண்ணில் நினைத்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் எளிதாக புரியும் .

சோழர் வரலாறு கூறும் இலக்கியங்களும் எம்மவர்கள் பிற்காலத்தில் எழுதிய இலக்கிய வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன் , மற்றும் யலதீபம் ,கடல்புறா ,போன்றவையும் இந்த துறைமுகத்தின் வரலாற்று தொடர்புகளை எடுத்து கூறுகின்றன .

உலகத்துக்கு நாகரீகத்தை கற்று கொடுத்த நாகர்கள் வாழ்ந்த இந்த தீவில் இருந்த துறைமுகம் தெற்காசிய நாடுகளுக்கும் அரேபிய நாடுகளுக்கும் இடையேயான கடல் போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக ஒரு காலத்தில் இருந்து இருக்கின்றது .

புகழ் பூத்த புண்ணிய பூமியான இந்த தீவில் அமைந்து இருந்த இந்த துறைமுகம் இன்று இல்லாவிட்டாலும் அது வரலாற்றில் ஆற்றிய பெரும் சேவை நயினாதீவு என்ற இந்த சிறு தீவு உலக அளவில் பெயர் பெற ஒரு காரணமாய் இருந்தது என்ற கூற்றை யாரும் மறுப்பதற்கு இல்லை .

எழுத்துருவாக்கம் – சிவமேனகை