காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் :
காலை : தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், தாழை,
நண்பகல் : வெண்தாமரை, அரளி, பொரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ்.
மாலை : செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதி, முல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம்.

அஷ்ட புஷ்பங்கள் : அறுகு, சண்பகம், பன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, ப்ரஹதி, அரளி, தும்பை இலைகள்.

எடுக்கப்பட்ட புஷ்பங்களின் உபயோக நாட்கள் : தாமரை – 5 நாட்கள், அரளி – 3 நாட்கள், வில்வம் – 6 மாதம், துளசி – மூன்று மாதம், தாழம்பூ – 5 நாட்கள், நெய்தல் – 3 நாட்கள், சண்பகம் – 1 நாள், விஷ்ணுக்ரந்தி – 3 நாள், விளாமிச்சை – எப்போதும்.

உபயோகப் படுத்தக் கூடாத புஷ்பங்கள் : கையில் கொண்டு வந்தது, தானாக விழுந்தது,ஆமணக்கு அல்லது எருக்க இலைகளில் கட்டிக் கொண்டு வந்தது, வாசனை அற்றது, மயிர் கலந்து கிடந்தது, புழு இருந்தது, மிகக் கடுமையான வாசனை உள்ளது, வாடியது, நுகரப்பட்டது, தானாக மலராமல் செயற்கையாக மலரச் செய்யப்பட்டது, அசுத்தமான முறையில் எடுத்து வரப்பட்டது, ஈர வஸ்திரத்துடன் எடுத்து வரப்பட்டது. யாசித்துப் பெறப்பட்டது, பூமியில் விழுந்து கிடந்தது ஆகியன. பொதுவாக, மலராத மொட்டுக்கள் (சம்பக மொட்டு நீங்கலாக) பூஜைக்கு உதவா.

துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தருப்பை, அருகு, அஸிவல்லி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி – ஆகிய செடி கொடி, மரங்களின் இலைகள் (பத்ரங்கள்) பூஜைக்கு உதவும்.

அக்ஷதை, வெள்ளெருக்கு, ஊமத்தை இவை விஷ்ணு பூஜைக்கு ஆகாது. செம்பருத்தி, தாழம்பூ குந்தம், கேஸரம், குடஜம், ஜபா புஷ்பம் இவை சிவனுக்கு ஆகாது. அறுகு, வெள்ளெருக்கு மந்தாரம் – இவை அம்பாளுக்குக் கூடாது. துளசி விநாயகருக்கு ஆகாது.

புஷ்பங்களைக் கவிழ்த்துச் சாத்தக்கூடாது; ஆனால் புஷ்பாஞ்சலியின்போது மலர்கள் கவிழ்ந்து விழுவது தவறல்ல. புஷ்பச் சேதம் செய்யக் கூடாது. அதாவது, ஒரு மலரை சிறிது சிறிதாகக் கிள்ளியோ வெட்டியோ பயன்படுத்தக் கூடாது.