தமிழ் மாதங்களில் “ஆடிக்கும், “மார்கழிக்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த மாதத்தில் வரும் “ஆடி செவ்வாய் கிழமைகள்” சிறப்பான தினங்களாகும். இந்த ஆடி செவ்வாய் விரதம் இருப்பது மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட வேண்டும். பின்பு வீட்டையோ அல்லது பூஜையறையையோ மட்டுமாவது நீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பூஜையறையில் உள்ள அத்தனை இறைவனின் படங்களுக்கும் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏதேனும் பழங்கள் மற்றும் பாலை நீங்கள் வணங்கும் இறைவனுக்கு நிவேதனம் வைக்க வேண்டும்.

இதை செய்த பின் இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு குத்துவிளக்குகளையும் இரு புறமும் வைத்து விட்டு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். இப்போது உங்கள் பரம்பரையின் குல தெய்வத்தை வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நீங்கள் வணங்கும் இறைவனின் ஆசிகளை பெற்று தரும்.

இந்த தினத்தில் உண்ணா விரதம் இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும் என்றாலும் முழு தினமும் உண்ணா நோன்பு இருக்க முடியாதவர்கள், இந்த தினத்தில் பழங்கள் மற்றும் பாலை உணவாக கொள்ளலாம். இந்த பால், பழங்களையும் உண்ணாமல் சாதாரண உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், இந்த செவ்வாய் கிழமை காலை இறைவழிபாட்டை முடித்த பின்பு உண்ண தொடங்கலாம்.

ஆடிச் செவ்வாய் தேடிக்குளி என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. செவ்வாய்க் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய் சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாகச் சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் தீவிரமாகத் தாக்குகின்றன. இதனால் ஜாதகர் உடல், மன ரீதியாக பெரும் பாதிப்பைப் பெறுகின்றார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருத்தல் அவசியம்.

அவ்வாறு பலம் பெற்று இருக்கும் ஜாதகர் வாழ்வில் சகல வசதிகளும், அதாவது,சொந்த வீடு, வாசல், சொத்து என்று வசதியாக இருப்பர். செவ்வாய் பலம் இழந்து காணப்பட்டால், செவ்வாய் தோஷம்,  வாழ்க்கையில் பிரச்னை, திருமணத் தடை ஆகியவை ஏற்படும். எனவே செவ்வாயின் பலம் வாழ்வில் மிகவும் அவசியம். செவ்வாய் தோறும் முருகப் பெருமானையும், துர்க்கையம்மனையும் பூஜித்து வந்தால் செவ்வாய் பலம் பெறும்.