முன்னோர்களை வணங்கும் ஆடி அமாவாசை | Nainathivu | நயினாதீவு

முன்னோர்களை வணங்கும் ஆடி அமாவாசை

இன்று ஆடி அமாவாசை

விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக்கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது.

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள். விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்.

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் அனுஷ்டிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். சூரியன் சிவ அம்சம், சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.

விரதம் சரி… அது என்ன கதை? எதற்காக அதைச் சொல்ல வேண்டும்?
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. அரற்றினாள்.. தவித்தாள்.. தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

விரதம் இருப்பது எப்படி?

இந்த விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள். காலையில் எழுந்து ஆற்றிலோ, குளத்திலோ நீராடிவிட்டு, கரையோரத்தில் அமர்ந்து அந்தணர்களைக் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆற்றிலோ, குளத்திலோ நீராட முடியாதவர்கள் வீட்டில் நீராடிவிட்டு அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்று, அங்கு அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம்.

அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.

திருவள்ளுவர் திருக்குறளில்,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43)

என்கிறார் . “தென்புலத்தாராகிய முன்னோர், கடவுள், விருந்தினர், உறவினர், தன் குடும்பம் ஆகிய ஐந்து பேரையும் இல்லறத்தில் இருப்பவர் காப்பாற்ற வேண்டும்” என்பது இதன் பொருள்.

இதில், முதலிடத்தை முன்னோருக்கு தருகிறார் வள்ளுவர். இதிலிருந்தே நம் முன்னோருக்கு வாரிசுகள் செய்ய வேண்டிய கடமை தெளிவாகிறது. அவ்வகையில், தை அமாவாசையையும், ஆடி அமாவாசையையும் “முன்னோர் திருநாள்” என்றே அழைக்கலாம். இந்த நன்னாளில், நம் முன்னோரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.