ஆடிப்பூரம் 24.07.2020
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள்.
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.
அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.
சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள்.
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி.
ஆடியில் பூத்த அரும்பு: ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை.
இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள்.
தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும்.
நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள்.
எல்லா கோயில்களிலும் அம்மன், அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். இதை அணிந்துகொண்டால் திருமண பாக்யம், குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்நாளில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற அவள் பாதம் பணிவோமாக.
“பூத்தவளே புவனம் பதின்னான்கினையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு மூத்தவளே மூவா முகுந்தற்கு இளையவளே பின் மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே”
ஆடிப் பூர தினத்தில் அம்பிகையை தரிசனம் செய்வோம் !
ஆனந்தமான நல்வாழ்வு பெற்றிடுவோம் !!